ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட வ.உ.சி சந்தையை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் திட்டம் உள்ளது. இதற்குத் தொடக்கத்திலிருந்து வ.உ.சி சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து காய்கறி சந்தையில் செயல்பட்டு வரும் கடைகளை எந்தவித மாற்றமும் செய்யாமல் இடிப்பதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனு மீதான விசாரணையில், வியாபாரிகள் நலன் கருதி மே 7ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி வ.உ.சி காய்கறி மார்கெட் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்று செய்தார். அதில், ”தூத்துக்குடியில் உள்ள இந்த காய்கறி சந்தை மிகவும் பழமையானது.
1972 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. இதில் 62 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கடையில் 6 பேர் வேலை செய்து வருகின்றனர். மொத்தம் 6 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த கடைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காய்கனி சந்தையை ஸ்மார்ட் சிட்டி கொண்டுவந்து இதை மாற்றி அமைக்க புதிய கட்டடம் கட்ட தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தில் புதிய கடைகள் கட்டுவதற்காக தற்போது தூத்துக்குடி காய்கனி சந்தையில் நிரந்தரமாக இருக்கும் கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எந்தவித முன்னேற்பாடும் இன்றி கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
500 மீட்டர் கடலோர பாதுகாப்பு மண்டலப் பகுதியில் வருவதால் உரிய அனுமதி பெற்றுத் தான் பணிகளைத் தொடங்க வேண்டும். எனவே தூத்துக்குடி வ. உ.சி. காய்கறி சந்தையில் செயல்பட்டு வரும் கடைகளை எந்தவித விதிமுறைகளும் பின்பற்றாமல் மாற்று ஏற்பாடு செய்யாமல் பொலிவுறு நகரத் திட்டத்திற்காக வெளியேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மார்கெட் சந்தையில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்கள், வியாபாரிகள் நலன் கருதி மே 7 ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்யவும், தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுக் கடைக்கும் செல்லவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வ.உ.சி.மார்க்கெட் கடைகளை இடித்தால் ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைப்போம்- வியாபாரிகள் எச்சரிக்கை!