மதுரை: தேனி, கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாபு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், எனது காளை மூன்றாம் பரிசு பெற்றது. அதே உத்வேகத்தோடு 2021ஆம் ஆண்டு, ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் எனது காளை பங்கேற்றது.
அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற காளைக்கு கார் ஒன்றும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது வரை பரிசு வழங்கப்படவில்லை. ஆகவே, 2021ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற எனது காளை கருடனுக்கு கார், சான்றிதழ் இரண்டையும் வழங்கவும், அதுவரை 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரரின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களுக்குள்ளாக பரிசீலிக்கவும், மனுதாரரின் காளையே முதல் பரிசு பெற்றது என்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான பரிசை இரண்டு வாரங்களில் வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: அனைத்து சாதி அர்ச்சகர் நியமன விதி: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு