ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கோகுல்ராஜ் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில் என் மீதும், யுவராஜ் உட்பட 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு அக்டோபரில் 1ஆம் தேதி கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமீன் 2018 ஜூன் 2ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்த மனு கடந்த ஜூன் 26 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே, அதனை ரத்து செய்து எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுகுறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.