புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமுதாயப் பெண்கள் குறித்து தவறாகப் பேசி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து அப்பகுதியினர் சாலை மறியலிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த விவகாரத்தில் தவறாகப் பேசிய இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் மதுரை தென் மண்டல காவல்துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரனை சந்தித்துப் புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வாட்ஸ்அப்பில் பெண்கள் குறித்து தவறாக பேசி ஆடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது' எனத் தெரிவித்தார்.