மதுரை: கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஜூன்.28) தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கரோனா பெருந்தொற்றுக்கு உலக அளவில் தடுப்பூசி மட்டும் தான் தீர்வாக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கக் கூடிய மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் ஒன்றிய அரசு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காத சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. மிகச் சிரமத்திற்குப் பிறகு தான் தடுப்பூசியை மாநில அரசுகள் பெற்று வருகிறோம்.
தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் முன்னர் பெரும் தயக்கம் காட்டினர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலான விழிப்புணர்வு காரணமாக மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். இரண்டாவது அலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மே மாதத்தில் பரிசோதனை முடிவுகள் 20 விழுக்காடாக இருந்த கரோனா தொற்று தற்போது ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு நிரந்தரமான தீர்வு நூறு விழுக்காடு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் செய்த சட்ட தவறுகள் திருத்தப்படும் - பழனிவேல் தியாகராஜன்