மதுரை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு அரசுக்கு கேள்வி
அப்போது ”உச்ச நீதிமன்றம் 139.5 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறு அணையில் கேரளா அத்துமீறி மதகைத் திறந்து விட்டிருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பது தெரியவில்லை” என்றார்.
”முல்லைப் பெரியாறு அணை குறித்து, கேரளத்தைச் சேர்ந்த நடிகர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். திமுகவின் கூட்டணிக் கட்சி கேரளத்தை ஆள்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, மாநில உரிமையை விட்டுக்கொடுக்கிறதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக்கொள்கை
”இக்கொள்கையின்படி, கல்வி என்பது மத்திய, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்படி, இரண்டு அரசுகளும் கலந்து கல்விக் கொள்கையை வகுக்க முடியும். அப்படியிருக்கையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எதன் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்காது என்று சொல்ல முடியும். புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி
அரசியல் வாழ்க்கையில் விமர்சனங்கள் எழுவது இயல்புதான். என்னைப் பற்றி மீம்ஸ் போடுகிறவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று சொல்கின்ற நபர் நானில்லை. அவற்றையெல்லாம் ரசித்து விட்டு கடந்து சென்றுவிடுவேன். அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களது கூட்டணி அதிமுகவோடுதான். அதில் எந்தவித மாற்றமுமில்லை. மேலும், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து பாஜக கருத்து கூறுவது நாகரிகமல்ல” என்றார்
”தமிழ்நாடு ஆளுநர் நியமனம் குறித்த காங்கிரஸ் கட்சியின், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கூற்று, ”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போன்றது. மேலும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களை கோப்புகளைக் கொண்டு வரச் சொல்லி ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறை என்று தலைமைச் செயலாளர் இறையன்பே கூறியுள்ளார்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' - விதைக்கப்படுவது கல்வியா? காவியா?