மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள கழிப்பறை அசுத்தமாக இருப்பதாகவும், அவற்றை சுத்தம் செய்து கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டி தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அந்த கட்சியின் மாநில பேச்சாளர் ஜெயக்குமார் கூறுகையில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் இயங்கி வருகின்ற அரசு ராசாசி மருத்துவமனை வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லை. இதனால் இங்குள்ள பெண் நோயாளிகள், பார்வையாளர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இதைப்பற்றி ஊழியர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24மணிநேரமும் குளிரூட்டப்பட்டு இயங்கவேண்டிய அறைகளில் குளிர்சாதனங்கள் இயந்திரங்கள் ஒன்றுகூட இயங்கவில்லை.
இதுகுறித்து மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்துள்ளோம் என்றார்.