ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், மது கிடைக்காமல் குடிமகன்கள் தள்ளாடி வருகின்றனர். இதனால், ஆங்காங்கே கள்ளச் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை பிடிப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் கூடல்நகர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பின்புறம் சிலர் கள்ளச் சாராயத்திற்கு தேவையான ரசாயன திரவம் உள்ளிட்ட மூலப்பொருள்கள் தயாரித்து வருவதாக கூடல்புதூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, மதுவிலக்கு தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஐசக் சாமுவேல் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு ரசாயன திரவம் காய்ச்சிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், காவல் துறையினரைக் கண்டதும் தெரித்து ஓடினர்.
பின்னர், அவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிவராஜ் (34), லட்சுமிகாந்தன் (29), ஜெனன் (28) என்பது தெரியவந்தது. மேலும், மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுபானத்துக்கான ரசாயன திரவத்தை காய்ச்சி தாங்களே குடிக்க முடிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!