மதுரை அவனியாபுரம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் ராணி. இவரது, மகன் விக்னேஷ் என்ற சுப்பிரமணியன். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை பார்த்துவிட்டு, 2018ஆம் ஆண்டு விடுமுறைக்காக மதுரைக்கு வந்தார். அப்போது, அவருடைய நண்பர் சரண் என்பவருடன் சேர்ந்து மாரி என்பவரை வெட்டியுள்ளார். இச்சம்பவத்தால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறைக்குச் சென்றார்.
இதையடுத்து, வெளியே வந்த அவர், ஆறு மாதங்கள் மும்பைக்குச் சென்று வேலை செய்துவந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் மதுரை வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக விக்னேஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தார்.
இந்நிலையில், மே 24ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் உள்ள பெரிய பங்களா அருகே சாலையின் ஓரத்தில் விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர், விக்னேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசராணையை தொடங்கினர். முதற்கட்டமாக விக்னேஷின் தாயாரிடம் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியதில், கடந்த மே 21ஆம் தேதி விக்னேஷ் அவரது இருசக்கர வாகனத்தில் தனியாக வந்தபோது மாரியின் ஆதரவாளர்கள் மணி, சோனா, சோம்பன் ஆகியோர் வழிமறித்து அவரைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், விக்னேஷ் ஏற்கனவே மாரி என்பவரை வெட்டியதால், முன்விரோதம் காரணமாக மாரி, தங்கபாண்டி, டோக் ரவி ஆகியோர் விக்னேஷை காரால் ஏற்றி நிலை தடுமாறவைத்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடுத்த கடனை திரும்பக் கேட்ட இன்சூரன்ஸ் முகவர் பெட்ரோல் ஊற்றிக் கொலை!