மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள அம்மா கிச்சன் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அம்மா கிச்சனில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கரோனா தடுப்பு அலுவலர் சந்திரமோகன் மற்றும் மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சந்திரமோகன், "மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்கள் உடனே அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து மருத்துவமனைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அளவு குறைந்துள்ளது.
மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். அறிகுறி இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதியை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு, தற்போது 700 படுக்கைகள் தயாராக உள்ளன. கரோனாவிற்கு சிகிச்சையளிப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தப்பியோடிய கைதி ராஜா பிடிபட்டார் - இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்