தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியா முழுவதும் 30 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதில் தூத்துக்குடியும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில், போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா என சுமார் 6 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் 15 பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வ.உ.சி கல்லூரிக்கு முன்பாக உள்ள வழிக்கால்வாய் உட்பட பல்வேறு நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து இந்த பூங்காக்களை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இது நீர்நிலைகளை பாதுகாப்பு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. பூங்காக்கள் அமைக்கப்பட உள்ள வழிக்கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகள் முன்பு மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய நிலையில் தற்போது மழைநீர் வடிகால்களாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரிக்கு முன்புறம் உள்ள காண்டூயிட் கால்வாய் உள்பட நீர்நிலை பகுதிகளில் பூங்காக்களை அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.