மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, சாலையோரத்தில் வசித்துவரும் சுமார் 200 ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
பழங்காநத்தம், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரையில் செயல்படும். இங்கு தங்கியிருப்பவர்களுக்கு உணவு, உடை, தரைவிரிப்பு உள்பட அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும்.
யோகா, உள்ளரங்க விளையாட்டுகள், திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்தும், முகாமில் சமூக இடைவெளி விட்டு இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.