ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, திருமண மண்டபத்தில் உள்ள முத்துக்குமாரசாமி தெய்வானை ஆகியோருக்கும் பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, பன்னீர் காவடி, நட்சத்திர காவடிகள் எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, முத்துக்குமாரசாமி தெய்வானை என இரண்டு முருகப்பெருமான்கள் சப்பரத்தில் கிரிவலத்தைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் முத்துக்குமாரசாமி தெய்வானை வருடத்திற்கு ஒருமுறை தைப்பூசத்தில் மட்டுமே சப்பரத்தில் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பௌர்ணமி தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையின் வழியாகச் சுற்றி வந்து சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தைப்பூசம்... பக்தர்கள் தரிசனம்!