மதுரை அரசு மருத்துவமனையில் இந்தியக் கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலை நேரில் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், 'இந்திய கடற்படையால் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர் கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை நன்கு தேறி உள்ளது. இன்னும் ஓர் இரண்டு நாட்களில் வீடு திரும்ப உள்ளார். ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு வழங்கிய நிதி உதவி போதாது. கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களைத்தாக்கி வருகிறது. ஆனால், இது குறித்து மத்திய அரசு தமிழ்நாடு மீனவர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. பாஜக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஓர் இயக்கம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் திரைமறைவில் செயல்படக்கூடிய பதிவு செய்யப்படாத இயக்கம் என்பதாலேயே அதனை நாங்கள் எதிர்க்கிறோம்’ என்றார்.
மேலும் அவர், 'அது தலை மறைவு பயங்கரவாத இயக்கம் போன்று செயல்படுகிறது. இந்தியா முழுவதும் 18 குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இந்த தொடர்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனுஸ்மிருதி திருமாவளவனால் எழுதப்பட்டது அல்ல. மனுஸ்மிருதியை நம்புகிற வருணப் பிரிவினரால் எழுதப்பட்டதாகும். அதில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத்தான் தொகுத்து நாங்கள் வெளியீடு செய்துள்ளோம். 1865-ல் ராமானுஜாச்சாரியார், ஆனந்த நாச்சியாரம்மாள், திரிலோக் சீதாராம் ஆகியோர் எழுதிய மனு ஸ்மிருதி நூலையே நாங்கள் தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க:ஜி20 தலைமைத்துவத்தின் இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் வெளியிடுகிறார்