மதுரை: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுரை ஆதீனத்தின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், சைவ சமயத்திற்கும் நேர்ந்திருக்கும் பேரிழப்பாகும்.
அவர் ஆன்மீக தளத்தில் மட்டுமின்றி மதநல்லிணக்கம், ஈழத்தமிழர் விடுதலை, தமிழ் வழிபாடு, குடமுழுக்கு போன்ற பல்வேறு அரசியல் பிரச்னைகளிலும் ஈடுபட்டு தனது கருத்துக்களை முன்மொழிந்தவர்.
மதுரை ஆதீனத்தின் மறைவு
சமூக நல்லிணக்கத்தை வென்றெடுப்பதற்காக பொறுப்புணர்வோடு பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகளை ஊக்கப்படுத்தினார். சனாதன சக்திகள் தங்களை ஆக்கிரமித்த போது, சைவர்கள் இந்துக்கள் இல்லை என்று துணிவாக வெளிப்படையாகப் பேசியவர். சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒருபோதும் அவர் ஏற்காதவர்.
மக்களவையிம் இரு அவைகளும் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே மூடப்பட்டது. அதாவது முடித்து வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் இந்த கூட்டத்தொடர் நடந்து இருக்க வேண்டும். 11ஆம் தேதியே நிறைவடைந்ததாக அறிவித்துவிட்டார்கள்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போன்றவர்கள் மக்களவையில் கடைசி நாளன்று, எதிர்க்கட்சிகள் மிகுந்த மன உளைச்சலை தரும்படி நடந்துகொண்டார்கள் என்றெல்லாம் பதிவு செய்தனர்.
விவாதிக்க தயாராக இல்லை
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். ஆனால் அதுகுறித்து இருமன்றங்களிலும் விவாதிக்க அரசு தயாராக இல்லை.
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கெனத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கது. வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்னைகள் பேசப்பட வேண்டும். மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றை பற்றி பேச வேண்டும் என்றாலும், விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இந்தியா முழுவதும் தலைவிரித்தாடும் நிலையில், அதுபற்றி பேச வேண்டும் என்றாலும் கூட எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, ஜூலை 19ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் அதற்கு அனுமதிக்கவில்லை.
வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்
ஆகவே மோடி அரசின் பிடிவாதமான போக்கு தான் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல் போடுவதற்கு காரணம். நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைவர்கள் சபாநாயகர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு அளவில் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய ஒரு நிதிநிலை அறிக்கையை தான், திமுக அரசு வழங்கியிருக்கிறது. வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை முதன் முறையாக திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது.
இந்தியாவில் இது மூன்றாவது மாநிலம் என்று சொல்லப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் அடுத்து தமிழ்நாட்டில் தான் வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்
அதேபோன்று பனை விதைகளை ஊன்ற வேண்டும், பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்தும் வரவேற்கத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கான விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், பனைமரத்தை பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தை முன்னெடுத்தோம்.
இன்று தமிழ்நாடு அரசே முன்வந்து அதை ஒரு கொள்கை அடிப்படையிலான செயல்திட்டமாக அறிவித்திருப்பதை மனமார வரவேற்று பாராட்டுகிறோம்.
தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரி விதிப்பில் மூன்று ரூபாய் குறைத்திருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. பிற மாநிலங்களுக்கு முன்னோடியான ஒரு முடிவு, துணிச்சலான முடிவு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது நீண்ட நெடிய கனவு. பெரியார் நெஞ்சில் தைத்த முள் அதை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவருடைய அந்த முயற்சி தடைப்பட்டிருந்தது.
தற்போது அதை வெற்றிகரமாக தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார். இது இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்து இருக்கிறார்கள்.
முன்னதாக கேரளாவில் அவ்வாறு சிலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றாலும், தற்போது பெண்கள் உட்பட எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களும் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யக் கூடிய உரிமையை சட்டபூர்வமாக்கி நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை” என்றார்.