கரோனா வைரஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்றாட வேலைக்குச் செல்லும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல் குடும்ப நிதியாக 1,000 ரூபாய் வழங்கும் இத்திட்டத்தை ஏப்ரல் 2ஆம் தேதி நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம், அதன் ஒன்றியத்துக்கு உள்பட்ட 48 ஆயிரத்து 725 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான வரிசை எண் குறிப்பிட்ட கூப்பன்களை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணியை இன்று தொடங்கினர்.
இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கூப்பன் விநியோகம் செய்யப்படும் எனவும் கூப்பன் வழங்கிய பின்பு நாள்தோறும் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு கடைகளிலும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதாகவும் கூப்பனில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கப்பட்ட தேதி, நேரத்தை கருத்தில் கொண்டு கூட்டத்தை தவிர்க்கும் விதமாக மக்கள் பொருள்களை வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். இதன்படி திருமங்கலத்தில் 48,725 குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க... ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம்