மதுரை: அவனியாபுரம் சாலையில் உள்ள பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (50). இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று (ஜூலை 07) ரத்தினவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் ரத்தினவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அறையின் உள்ளே மதுவாடையாக இருந்ததுள்ளது. திருடன் போதையில் தூங்குவதை கண்ட ரத்தினவேல் அவரை உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான நடராஜன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.