தமிழ்நாடு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரம் உடையார் கண்மாயில் தூர்வாரும் பணியினை அமைச்சர் செல்லூர் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”திமுக நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தை கண்டு நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கு 200 முதல் 300 ரூபாய் பணம் கொடுத்து பொதுமக்களை அழைத்து வருகிறார்கள்.
அவரது காலத்தில் இந்தப் பகுதியில் என்ன மாதிரியான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றது என கூற முடியுமா? இன்னும் முப்பது நாள்களில் மதுரையில் தங்கு தடையின்றி கழிவுநீர் கலக்காத சுத்தமான குடிநீர் வழங்கப்படும். திமுகவினர் பத்தாண்டுகளில் மக்களை சந்தித்தார்களா, தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்ப்பது மக்கள் பணி இல்லை. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை கேலி கிண்டல் பேசியவர்கள்தான் திமுகவினர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் மனைவியிடமே சிபிஐ விசாரணை நடத்தபட்டது. இது கேவலம் இல்லையா? மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் இதுதான் திமுகவின் கொள்கை. மத்திய அரசுக்கு நாங்கள் இணக்கமாக இருக்கிறோம். திமுக போல் பயந்துகொண்டு இல்லை. தோழமை கட்சிகளுக்காக உயிரையே கொடுப்போம், திமுகவை போல் இல்லை.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஸ்டாலின் திமுக விற்கு செல்வாக்கு உள்ளது என்றால் நேரடியாக சவால் விடுகிறேன், உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா? இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக. இரட்டை இலை மக்களின் இதயக்கனி. 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: தொடங்கியது ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவை!