மதுரை - தேனி மீட்டர்கேஜ் ரயில் பாதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில் பாதை பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பாதையில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மதுரை-உசிலம்பட்டி, உசிலம்பட்டி-ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி-தேனி என பகுதி பகுதியாக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் தற்போது தேனி வரை அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மதுரையிலிருந்து தேனிவரை இன்று ரயில் என்ஜின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 10.30-க்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்ட ரயில் என்ஜின், உசிலம்பட்டிக்கு பகல் 12:30 அளவிலும், பிறகு அங்கிருந்து ஆண்டிப்பட்டிக்கு பிற்பகல் 1.30 மணியளவிலும், தேனிக்கு 2.30 மணி அளவிலும் ஆய்வினை நிறைவு செய்தது. பிறகு அதே மார்க்கமாக அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணி அளவில் மதுரைக்கு வந்தடையும்.
தற்போது நடைபெற்ற இந்த ஆய்வுக்கு பிறகு மீண்டும் அதிவேக வெள்ளோட்டம் நடைபெறும் என்றும் அதற்கு பிறகு உயர் அலுவலர்களின் உரிய சான்றுக்குப் பிறகு மதுரை தேனி ரயில் போக்குவரத்து தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொடியேற்றத்துடன் தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழா!