மதுரை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் நாகமுத்து. கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்துவந்தார். இவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா உள்பட பலர் மீது தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையல், இந்த வழக்கு விசாரணையில் உதவி செய்வதற்காக இரண்டு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அதில், "ஏற்கனவே இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், அதிக வேலைப்பளுவோடு இருப்பதால், வழக்கை விசாரிப்பதில் சுணக்கம் ஏற்படுவதால், வேறு இரு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று (பிப்ரவரி 15) விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரருக்கு வழக்கில் உதவி செய்வதற்கு இரண்டு வழக்கறிஞர்களை நியமனம் செய்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு