மதுரை செல்லூர் அருகே உள்ளது மீனாட்சிபுரம். இந்தப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று வழக்கம்போல் இன்று (மே 8) காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பெருந்திரளானோர் அக்கடையின் முன்பாக நின்று முற்றுகையிட்டனர்.
இதனை கண்ட காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைந்து போகச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அதனை கேட்கமால் அங்கேயே கூடியிருந்தனர். இதனால் காவல்துறையினருக்கும் பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் காவல்துறையினர் அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைக்கும் விதமாக லேசாக தடியடி நடத்தினர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக செல்லூர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டியுள்ள மீனாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்பின்னும் தொடர்ந்து போராடிய பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.