மதுரை: வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நல்லகாமன், ஒத்திக்கு இருந்த வீட்டை காலிசெய்வது தொடர்பாக 1982ஆம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில் நல்லகாமன், அவரது மனைவி ஆசிரியை சீனியம்மாள் ஆகியோரை 1982ஆம் ஆண்டு காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட காவல் துறையினர், தம்பதியின் ஆடைகளை அவிழ்த்து சிறையில் வைத்து கொடுமைப்படுத்தினர். இது தொடர்பாக காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, 2010ஆம் ஆண்டு ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் காவல் துறையினரை விடுவித்தது. இதனால் நல்லகாமன் தனக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இதனிடையே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமாரும், நல்லகாமனும் இறந்தனர். இதனால், நல்லகாமனின் மகன் சுந்தரபாண்டியன் வழக்கைத் தொடர்ந்து நடத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "உச்ச நீதிமன்றம் வழக்கை ரத்துசெய்ததால், இழப்பீடு வழங்க முடியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. சந்தேகத்தின் பலனை கருத்தில்கொண்டே உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவல் துறையினரின் வன்முறையும், மனித உரிமை மீறலும் நடந்துள்ளது.
அப்பாவிகள் மீது காவல் துறையினரின் வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது. நல்லகாமன் இப்போது உயிருடன் இல்லாததால், அவரது கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி பேரம்: உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்