மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜவஹருல்லா கூறும்போது,’ சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அகழாய்வு துறையினரால் அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பான முறையிலேயே ஆகழ்வு ஆராய்ச்சி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தார். பின் அவரை இடமாற்றம் செய்து, அந்த திட்டத்தை கைவிட்டனர்.
பிறகு தமிழக அரசும் தமிழ்நாடு அகழ்வாய்வுத் துறையும் மிக சிறப்பான முறையில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சிகளை மீண்டும் தொடங்கி மிகப்பெரும் உண்மைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்தது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மிகப் பெரிய கலாசாரப் பாரம்பரியம், பண்பாடு உடன் வாழ்ந்து இருக்கிறார்கள் எனத் தெரியப்படுத்துகிறது. இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சிறப்பாக இருக்கின்றது.
இந்த அகழ்வாய்வின் முடிவுகள் தெளிவான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு அருங்காட்சியகம் மதுரையில் அமைத்து தமிழர்களுடைய வரலாறு பறைசாற்ற பட வேண்டும் என்பது மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதேபோல ராமநாதபுரத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது, அதனுடைய முடிவுகள் வெளிவரவில்லை. மத்திய அரசு கீழடியில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் வெளிவராத சூழலில் இருக்கின்றது. இது அனைத்தையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நேற்றைய தினம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது ட்ரிங்கிங் என்னும் சொல்லக்கூடிய கும்பல் படுகொலையை குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு சங் பரிவாரைச் சார்ந்தவர்கள் தான், இந்த கும்பல் படுகொலைக்கு இந்தியாவில் நிகழ்த்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக 2019ல் சென்ற ஆண்டைவிட கும்பல் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது என சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கும்பல் படுகொலையைத் தடுப்பதற்கு தவறிய மத்திய அரசு, அதை நியாயப்படுத்தக் கூடிய வகையில் ட்ரிங்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினரின் வேத நூலில் உள்ளது என்று மோகன் பகவத் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல அவருடைய உரையில் நாடு, வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் மக்கள் அதிகம் கவனம் கொள்ளக்கூடாது என்று சொல்வது நிச்சயமாக மக்களை ஏமாற்றக் கூடிய ஒரு செயலாகும்.
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெறக்கூடிய தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு அமோகமான வெற்றிவாய்ப்பு இருக்கிறது.
இதை வருகின்ற 21இல் நடைபெறவிருக்கின்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு மக்கள் அமோகமான ஆதரவைத் தந்து வருகின்றார்கள்.