சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மாரியப்பன் நகரில் ஏராளமான கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சன்னதி புதுக்குளத்தில் வசிக்கும் சுப்பையா என்பவரின் மகள் அம்சவள்ளிக்கும் மாரியப்பன் நகரைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் விஜய்க்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு மறு வீடு சென்ற தம்பதியினர், தங்களது தொழில் ஆதாரமான மீன்பாடி வண்டியில் ஏறி சற்றேறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலமாகச் சென்றனர். முதலில் கோயிலில் வழிபட்டு பெரியோர்களிடம் வாழ்த்து பெற்ற தம்பதியினர், மணப்பெண்ணின் வீட்டுக்கு மீன்பாடி வண்டியிலேயே சென்ற நிலையில், இது அப்பகுதியினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ராமு என்பவர் கூறுகையில், "எங்களுக்கு வரதட்சணை வாங்குவதோ, கொடுப்பதோ வழக்கமில்லை. கழைக்கூத்து ஆடுவதன் மூலமாகவே வருமானம் கிடைக்கும். ஆகையால் எங்களால் இயன்ற அளவிற்கான திருமண செலவுகளை மட்டுமே செய்வோம். மணப்பெண்ணுக்கு போதுமான நகைகளை அணிவித்து திருமணத்தை நடத்துகிறோம்.
மாட்டு வண்டிகளில் மணமக்களை அழைத்துச் சென்ற காலம் முன்பு இருந்தது. பிறகு அவரவர் வசதிக்கேற்றவாறு வாகனங்கள் அமைத்துக் கொண்டனர். எங்கள் வசதிக்கேற்ப நாங்கள் மீன்பாடி வண்டியில் மணமக்களை அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் வாழ்கிறோம்" என்றார்.
மணமகன் விஜய் இது குறித்து கூறும்போது, "எங்கள் தொழிலுக்கு பயன்படுத்துகின்ற மீன்பாடி வண்டியிலேயே நாங்கள் திருமண மறுவீடு சென்றதை பெருமையாகக் கருதுகிறோம். இது எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.