மதுரை: தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி ‘பரோல்’ என்ற வார்த்தையும், பரோல் தொடர்புடைய எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவது இல்லை. எனவே இனி அதை பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அவ்வாறு தண்டனை பெற்று சிறையில் உள்ள தண்டனை கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, அல்லது திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அல்லது அவசர கால விடுப்பு கோரி சிறையில் அதிகாரிகளிடம் விண்ணப்பிப்பார்.
அவ்வாறு கோரப்படும் விடுப்புகளுக்கு சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வர். இவ்வாறு மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விடுப்பு கேட்டு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற 7 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம்!
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள், சிறையில் உள்ள தண்டனை கைதிகள் தங்களுக்கு விடுப்பு கேட்கும் போது , ‘பரோல்’ வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் ‘பரோல்’ என்ற வார்த்தையை அடிக்கடி மனுவில் குறிப்பிடுகின்றனர்.
பரோல் என்ற வார்த்தைக்கு தனி வழி முறைகள் உள்ளன. அது பிற மாநிலங்களில் உள்ள விதிகளின்படி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி ‘பரோல்’ என்ற வார்த்தையும், பரோல் தொடர்புடைய எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவது இல்லை.
எனவே தமிழக தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் படி ‘பரோல்’ என்ற வார்த்தை பயன்படுத்த கூடாது. எனவே இனி தமிழகத்தில் தண்டனை கைதிகள், ‘பரோல்’ வழங்க வேண்டும் என பயன்படுத்த கூடாது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு வார்த்தைகளே பயன்பாட்டில் உள்ளன. எனவே இனி வரும் காலங்களில் தண்டனை கைதிகள் மனு தாக்கல் செய்யும் போது ‘பரோல்’ அடிப்படையில் விடுமுறை கோர இயலாது என அறிவுறுத்தி பொது உத்தரவை பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: நாகை போலீசாரின் அதிரடி ஸ்ட்ராமிங் ஆபரேஷன்.. ஒரே நாளில் 85 நபர்கள் அதிரடி கைது!