மதுரை: திருச்சியை சேர்ந்த அபிராமி,’’இந்திய குடியுரிமை வழங்க வேண்டி நான் அனுப்பிய மனுவை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரரின் பெற்றோர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியா வந்த பின்பு 1993ல் மனுதாரர் பிறந்துள்ளார். தற்போது மனுதாரருக்கு 29 வயதாகிறது. மனுதாரருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் குடியுரிமை கேட்டு மனு செய்துள்ளார்.
மனுதாரரின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். ஆனால் மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளார். அவர் இலங்கை குடிமகளாகவும் இல்லை மனுதாரரின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அது சரியானதாக இருக்காது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தில் இலங்கை இல்லை, ஆனால் இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்திய கூறுகள் உள்ளது.
எனவே, மனுதாரர் குடியுரிமை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதனை தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். மத்திய உள்துறை செயலாளர் மனுதாரரின் மனு குறித்து 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கினை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: மருத்துவ அறிக்கை பொய் கூறாது... பலாத்கார வழக்கில் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..