மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த குணசீலன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, உடன்குடி கிராமத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.
புகழேந்தி என்பவர் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே, உடன்குடி நகரில் இருந்து சுமார் 4 கி.மீ. வெளியே 2013ஆம் ஆண்டு ஜோதி நகர் என்ற பெயரில் அரசு அனுமதிபெற்று வீட்டுமனை செய்ய ஆரம்பித்தார். அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறாததால் அருகில் அவரது மனைவி சசிகலா பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட சுமார் 20 சென்ட் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த இடம் உடன்குடி நகரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ நகருக்கு வெளியே உள்ளது. உடன்குடி பேருந்து நிலையத்தின் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது.
பத்திரப்பதிவுத்துறையினர் உடன்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டாமல், மேற்படி தனியார் நன்கொடையாக அளித்த இடத்தில் நிரந்தர கட்டடம் கட்டுவதாக அறிவித்தனர். இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கரோனா ஊரடங்கை பயன்படுத்தி அங்கு கட்டடம் கட்டும் பணி ஆரம்பித்து தற்போது முடிவடையும் சூழலில் உள்ளது.
மேற்படி, புகழேந்தி தனது இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தேவையான எழுத்தர், ஜெராக்ஸ் கடைகள், விலைக்கு மற்றும் வாடகைக்குவிட கட்டி வருகிறார். பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் தனி நபர் ஆதாயத்திற்காக மேற்படி நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டி உள்ளனர். எனவே, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகம் காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தில் அமைக்கத் தடை விதிக்கவும், நகரின் மையப் பகுதிக்குள் அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”அரசு அலுவலகங்கள் கட்டப்படும் பொழுது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் கட்டப்படும் பொழுது நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்” எனக் கருத்து தெரிவித்து, வழக்கு குறித்து பத்திர பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: அந்தோணி பாப்புசாமி குறித்து அவதூறு வெளியிட்டவர்கள் பதிலளிக்க உத்தரவு