மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காட புதுப்பட்டியைச் சேர்ந்த ராமன் என்பவரது மூன்றாவது மகன் காளிதாஸ் (25). இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. காளிதாஸ் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்.
காளிதாஸ் மதுப்பிரியர் என்பதால் அவ்வப்போது மது அருந்தி வருவது வழக்கம். ஊரடங்கு காரணமாக கடந்த 44 நாள்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த காளிதாஸ் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நேற்று வேலைக்குச் சென்றார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்ததால் நேற்று காலை காளிதாஸ் தனது மனைவி சரண்யாவிடம் மது வாங்குவதற்காக ஆதார் அட்டையை வாங்கிச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் சரண்யா அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். காளிதாஸின் பெற்றோரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த ராமன் வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது காளிதாஸ் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்ட ராமன் அதிர்ச்சியுற்று அக்கம்பக்கத்தினரை அழைத்து காளிதாசை மீட்டு அங்கிருந்து வாகனம் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காளிதாசை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் காவல் நிலைய காவல் துறையினர், காளிதாசன் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகன் மதுவுக்கு அடிமையானவர் எனவும் ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் அடைக்கப்பட்டதால் மது குடிக்க வழியின்றி கடந்த சில நாள்களாக பித்து பிடித்தவர் போல் திரிந்ததாக தெரிவித்தார்.
மேலும், குடும்பத்தில் எந்தத் தகராறும் இல்லை என தெரிவித்த ராமன் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதால் காளிதாசன் 4 குவாட்டர் பாட்டில்களை வாங்கி அனைத்தையும குடித்துவிட்டு அளவுக்கதிகமான போதையில் செய்வதறியாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இறந்த காளிதாசின் உடலை மீட்டு உடற்கூறாய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் 44 நாள்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு மதுபான கடைகளை திறந்ததால் மதுபாட்டில்களை வாங்கி, மது அருந்தி அளவுக்கதிகமான போதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது வேதனையாக உள்ளது.
இதையும் படிங்க: அடை மழையிலும் அசையாமல் நின்ற மது பிரியர்கள்!