மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேல்பாண்டி -செண்பகம் தம்பதியினர். இவர்களுக்கு கோவரதன் (12), பிரமேத் (9) ஆகிய இரு மகன்கள். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், தினந்தோறும் மதியம் பிரமேத் தனது தந்தையுடன் குரங்கு தோப்பு பகுதியில் உள்ள ஐவேந்தர் கண்மாயில் குளிக்க செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் கண்மாயில் குளிக்கச் செல்லும்போது எதிர்பாராத விதமாக பிரமேத் கண்மாயில் தவறி விழுந்துள்ளார். சிறுவனின் தந்தை வேல்பாண்டி காப்பாற்ற முயன்றும் அவரால் பிரமேத்தை காப்பாற்ற முடியவில்லை.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கண்மாயிலிருந்து பிரமேத்தின் சடலத்தை மீட்டெடுத்தனர். பிறகு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலதுறையினர், சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை கண்முன்னே சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!