மதுரை: உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயக் கூலியான இவருக்கு ராம், லட்சுமணன் என்ற இரட்டையர்கள் மகன்கள். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றவர் லட்சுமணன் (24).
லட்சுமணன் ராணுவ பணியில் இணைந்து நான்காண்டுகள் ஆகின்றன. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இதனால் தும்மக்குண்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இதனையடுத்து இன்று ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பிறகு ராணுவ மரியாதைக்கு பின்னர் அவரது உடல் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு, புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு லட்சுமணன் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்