ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்களத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் "ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான அரிய வகை மரங்கள் உள்ளன. அங்குள்ள மரங்களில் அதிக பறவைகள் மற்றும் வெளவால்கள் தஞ்சம் அடைகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதால், பறவைகள் தஞ்சம் அடைய முடியாமல் தவிக்கின்றன. இதனால் அரிய வகை பறவைகள் மற்றும் வௌவால்கள் இறந்துபோகும் நிலை ஏற்படுகிறது.
எனவே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பறவைகள் மற்றும் வெளவால்கள் சரணாலயம் அமைத்து, அரிய வகை பறவைகள் மற்றும் வெளவால்களை பாதுகாக்க வேண்டும் என கடந்த ஜனவரி 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தேன். ஆனால் மனு மீது எவ்வித பதிலும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பறவைகள் மற்றும் வெளவால்கள் சரணாலயம் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பறவைகள் மற்றும் வௌவால்கள் சரணாலயம் அமைக்க இயலாது. வௌவால்கள் வன விலங்கு பட்டியலில் உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.