தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கிரிக்கெட் வீரரான இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,"சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு சிநேகா குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிநேகாவுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதை சிநேகா என்னிடம் தெரிவித்தார். இதனால் நாங்கள் இருவரும் கடந்தாண்டு டிச.13ஆம் தேதி திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். தற்போது சிநேகாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.
சிநேகாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு மறுத்தால் சிநேகாவை ஆணவக் கொலை செய்யும் அபாயமும் உள்ளது. தற்போது சிநேகா எங்கிருக்கிறார் என தெரியவில்லை. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சிநேகாவைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே என் மனைவி சிநேகாவைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை!