நெல்லையைச் சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2018ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது பேருந்து நிலையத்தில் அடி தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், அப்பகுதி முழுவதும் மணல் நிறைந்த பகுதியாகும். எனவே 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தது.
தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சில அரசியல் பிரமுகர்கள் உடந்தையோடு 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் மற்றும் களி மண்ணை சட்ட விரோதமாக நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் வேறு மாநிலத்திற்கு கடத்தி விற்பனை செய்துள்ளார்கள், இதனால் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் மணல் கடத்தலுக்கு துணைபோன அலுவலர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை அலுவலரான காவல் ஆய்வாளர் மாடசாமி நேரில் ஆஜராகி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டது என தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் கோபமடைந்து விசாரணை அலுவலரின் அறிக்கையை பெற்று வாசித்து பார்த்தனர். அதில் போதிய விசாரணைகள் இல்லை என்பது தெரிய வந்ததால் காவல்துறையினருக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்பட்டுள்ளது ஒரு லாரியை மட்டும் பிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்? அவ்வாறு வழக்குப் பதிவு செய்ததில் எத்தனை நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தீர்கள்? அதில் எத்தனை நபர்களை கைது செய்தீர்கள்? மணல் கொண்டு செல்லப்படும் உரிமையாளரை ஏன் கைது செய்யவில்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு காவல்துறையினர் சரியான பதிலை தெரிவிக்காததால் மணல் கடத்தல் விவகாரத்தில் காவல்துறையின் விசாரணையில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னல் பேருந்து நிலையத்திலிருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது? எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? சம்பவ இடத்திலிருந்து எத்தனை லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையின்போது மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் விசாரணை அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:லாரியில் மணல் கடத்தல் : வைரல் வீடியோ