மதுரையைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் இந்த அறிவிப்பு வெளியான ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த அரசாணை ஆண்டுதோறும், மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து உத்தரவிடப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு, இல்லாமல் இந்த அரசாணையை ரத்து செய்து விட்டு நிரந்தரமாக தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என புதிய அரசாணை வெளியிட வேண்டும்' என்றார்.
மேலும், தமிழகத்தில் பான் மசாலா, குட்கா பொருட்கள் அரசாணையின் படி தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அனைத்து நகரங்களிலும் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தடையின்றி அப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தமிழகத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கடைகளில் சோதனைகளை மேற்கொள்ளவும், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 132ன் படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து, தமிழக தலைமை செயலாளர், தமிழக குடும்ப நலன் துறை மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.