மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் இன்று (அக்டோபர் 2) கலந்துகொள்கிறார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த கிராமசபை கூட்டங்களுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காலை 9.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தருகிற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்கிறார்.
பாப்பாபட்டி கிராமத்தில் வடபுறம் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் இதற்கென சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது; காலை பத்து முப்பது மணி அளவில் இதில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு ஒரு மணிநேரம் கிராம மக்களோடு உரையாடுகிறார்; அச்சமயம் கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கும் உரிய பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு 11.35 மணிக்கு பாப்பாபட்டி அருகே உள்ள நாட்டாபட்டி கிராம வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை பார்வையிடுகிறார். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர், மதுரை மேலமாசி வீதியில் உள்ள அண்ணல் காந்தி அரையாடை புரட்சி மேற்கொண்ட நினைவில்லம் சென்று, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலக இடத்தையும், காந்தி அருங்காட்சியகத்தையும் பார்வையிடுகிறார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேற்காணும் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராம சிக்கல், கடந்த 2006ஆம் ஆண்டு தீர்த்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக கிராமங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மு.க. ஸ்டாலின், இதன் காரணமாகவே பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது: ஸ்டாலின் அறிவிப்பு