மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதலாவது உலக தமிழ் இசை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தமிழிசை ஆய்வாளர்களும் கலைஞர்களும் பங்கேற்று தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதித்து வருகின்றனர்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று பல்வேறு தலைப்புகளில் தமிழிசை குறித்த அமர்வுகள் நடைபெற்றன. இன்று காலையில் தொடங்கிய முதல் அமர்வில் அசையும் இசையும் என்ற தலைப்பிலான தனது ஆய்வுக்கட்டுரையை திண்டுக்கல்லை சேர்ந்த தமிழிசை ஆய்வாளரும், மென்பொருள் வல்லுனருமான துரைப்பாண்டியன் சமர்ப்பித்தார்.
அந்த அரங்கத்திலேயே, உலகிலேயே முதல்முறையாக உலக தமிழிசை மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு இத்துறையின் அமைச்சர் பாண்டியராஜன் எங்கே போனார்? மாநாட்டு ஏற்பாடுகள் கூட சரியாக ஒழுங்காக அமைக்கப்படவில்லை. வெளி மாவட்டத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ள ஆய்வாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தமிழிசை மாநாட்டை ஒழுங்கற்ற முறையில் நடத்துகின்ற அரசை நான் குற்றம் சாட்டுகிறேன். உலகத்தில் நடைபெற்ற எத்தனையோ மாநாடுகளுக்கு நான் சென்று கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான மாநாட்டை நான் பார்த்ததில்லை.
இது உலகின் மூத்த மொழியான தமிழுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம். கட்டுரை வாசிப்பாளர்களுக்கு ஐந்து நிமிடம், மூன்று நிமிடம் என்று நேரம் ஒதுக்கீடு செய்து அவர்களை இழிவுபடுத்துவது தமிழை இழிவுபடுத்துவதற்கு சமம் என்று மேடையில் பேசினார்.
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அமர்வின் ஒருங்கிணைப்பாளர்கள் துரைப்பாண்டியனை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றனர். ஆனாலும் தன்னுடைய கருத்தை மேடையில் பதிவு செய்துவிட்டேன் என கீழே இறங்கினார். இவரது பேச்சால் சிறுது நேரம் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது!