செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் வாகன உபயோகிப்பாளர் கட்டணம் கார் மற்றும் ஜீப்புக்கு கூடுதலாக ரூ.10-ம், பஸ் மற்றும் லாரிகளுக்கு 20 முதல் 30 வரையும் மற்றும் பல அச்சுகளைக் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை, அந்த அறிவிப்பை திரும்ப பெற தொழில் வணிகத் துறை சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 1,51,019 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன; இந்த நெடுஞ் சாலைகளில் 566 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 5134 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சுங்கச் சாவடிகள் வழியாக தினசரி சராசரியாக 64.50 லட்சம் வாகனங்கள் பயணித்து ரூ.135 கோடி வாகன உபயோகிப்பாளர் கட்டணம் அன்றாடம் வசூலிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் வாகன உபயோகிப்பாளர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன் பிரகாரம், ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என இரண்டு கட்டங்களாக டோல் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன உபயோகிப்பாளர் கட்டணம் உயரப்போகிறது. கார், வேன், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை பயணிக்க ஏற்கனவே செலுத்தப்படும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.10-ம், பஸ்சுக்கான டோல் கட்டணம் ரூ.20-ம், லாரிகளுக்கான கட்டணம் ரூ.35-ம் மற்றும் பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு கட்டணம் ரூ.150-ம் கூடுதலாக வசூலிக்கப்படவுள்ளது.
இந்த கட்டண உயர்வு தற்போதைய கட்டணத்தை விட 15 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. 60 கி.மீ இடைவெளியில் டோல்கேட் எதுவும் அமைக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைத் துறை விதிகளில் உள்ளது. தமிழகத்தில் 60 கி.மீ இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள 22 சுங்கச் சாவடிகள் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்கத்தால் அடையாளம் காணப்பட்டு 3 மாத கால அவகாசத்தில் இவை அகற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவிப்பு செய்து சுமார் 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரின் அறிவிப்பின்படி சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், சுங்கச் சாவடி கூடுதல் கட்டண உயர்வு மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் ஆயுட்கால சாலை வரி அரசுக்கு செலுத்தப்படுகிறது. எனவே, சுங்கச்சாவடிகளில், வாகனத்திற்கு ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளும் பயணப் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான செலவைக் கொண்டு வருகிறது.
எனவே சாலைகள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட கால வரம்பிற்குப் பின், சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அத்துடன் செயல்பட்டு வரும் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும், சுங்கச்சாவடி ஆரம்பிக்கப்பட்ட வருடம், எத்தனை ஆண்டுகளாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் இந்த வழித்தடத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கங்கட்டணம் வசூலிக்கப்படும் போன்ற விபரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக சுங்கச்சாவடிகளில் போர்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வருடாந்திர வாகன உபயோகிப்பாளர் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரண விசாரணை தாமதம் ஏன்?... அடுக்கடுக்கான பதில்கள் அளித்த நீதிபதி ஆறுமுகசாமி