கரோனா ஊரடங்கு காலத்தில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் தனது மகள் நேத்ராவின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை ஏழை மக்களுக்கு நிதி உதவியாக அளித்தார். இந்நிலையில், கடந்த மே 31ஆம் தேதி ஒலிபரப்பான, அகில இந்திய வானொலியில் ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முடி திருத்தும் தொழிலாளி மோகனின் இந்த சேவையைப் பாராட்டி இருந்தார்.
அதன் பிறகு அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமைப்பு (United Nation Association for Development and Peace), மோகனின் மகள் நேத்ராவை உலக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்தது. தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி நேத்ராவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவி நேத்ராவின் செயலைப் பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "யுஎன்ஏடிஏபியால் ஏழை மக்களுக்கான நல்லெண்ணத் தூதராக நீங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கடினமான கால கட்டத்தில் ஏழைகளுக்கு உதவிய உங்களின் நல்லெண்ணத்தைப் பாராட்டி இந்த அங்கீகாரத்தை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. 13 வயதில் நீங்கள் அடைந்த இந்த உன்னதமான நிலைக்கு உங்களின் எண்ணமும் நோக்கமுமே காரணம். உங்களின் செயல், அனைத்து வயதினருக்கும் ஊக்கம் அளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
இந்தியா முழுமைக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முன் மாதிரியாக நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும், குறிப்பாக மோகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்திற்கு அனைத்து மகிழ்ச்சியையும், செழிப்பையும் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: சுமார் 13.5 கோடி ரூபாய் அபராதம் வசூல்