நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியிலுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் ஒவ்வொன்றிலும் 1000 ஏழை எளிய குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நிவாரணமாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கிவருகிறார். அதன்படி இன்று திருநகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரணத்தை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதற்கான அதிகாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மதுரை மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணமாக ரூ.5 ஆயிரம் நிதியை தமிழ்நாடு அரசு வழங்கவேண்டும்.
வருகின்ற மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாய்மார்களின் தாலி, சேமிப்புகளை காப்பாற்ற டாஸ்மாக் கடைகள் திறப்பதை நிறுத்தி வைக்கவேண்டும். சிவப்பு மண்டலங்களாக உள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க பரிசீலனை செய்யவேண்டும்.
பேரிடர் காலங்களில் மக்களின் மீது புதிதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மற்ற மாநிலங்கள் தயாராக இல்லாத போது, தமிழ்நாடு 'வாட்' வரியை அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உண்மை நிலவரங்களை தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம் - சீமான்