பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாட மதுரை வந்த, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சி நடந்துகொண்டிருக்கிறது.
பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம். மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போன்று அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கப்படும். இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் கல்பாக்கம் ஒரு பகுதி, அதன் தலைமையிடம் மும்பையில் இருப்பதனால், தேர்வு மும்பையில் நடப்பது இயல்பான ஒன்று. அமித்ஷா வருவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம்" என்றார்.
அதிமுக கூட்டணியில், 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு பாஜக சார்பில் நெருக்கடி கொடுப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், யூகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
இதையும் படிங்க: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: தடயவியல், அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சோதனை