மதுரை: உதகை மலை ரயில் அண்மையில் தன்னுடைய சேவையை கரோனா ஊரடங்கிற்குப் பின்பு தொடங்கியது. முன்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ரயிலின் கட்டணம் தற்போது அதிகரித்துள்ளது. மலை ரயிலை தனியாருக்கு தாரை வார்த்ததே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, 3ஆயிரம் ரூபாயாக உள்ள கட்டணம் மார்ச் முதல் ஜூலை வரையிலான சீசன் காலத்தில் 12ஆயிரம் ரூபாய்வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே டார்ஜிலிங் மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.
இந்தியா முழுவதும் 150 ரயில்கள் தனியாருக்கு கொடுக்க அட்டவணை வெளியிடப்பட்டு ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன. இதில், தென்னக ரயில்வேயின் 26 ரயில்கள் அடக்கம். தாம்பரம் முதல் கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில்கள் இப்பட்டியலில் உள்ளன.
ஒரேநாளில் 485 ரூபாயாக இருந்த கட்டணம் மூன்றாயிரம் ரூபாயா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இவையெல்லாம் அரசு திடீரென செய்யவில்லை. முறையாக அறிவித்துதான் செய்கிறது. தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது.
தனியார் நிறுவனம் மலை ரயில் கட்டணத்தை மூன்றாயிரம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக பலர் சொல்கின்றனர். இதைவிட குறைந்த கட்டணத்திற்கு மலைகளையே தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு. இப்போது சொல்லுங்கள் தனியாரைவிட இளகிய மனதோடுதானே அரசு நடந்துகொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குன்னுாரில் தனியார் மலை ரயில் இன்று முதல் தொடக்கம்