மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த வீரபாகு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, "தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இது சட்டவிரோதமானது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம வேத விதிகளை முழுமையாக பயின்ற பல்லாயிர திரிபுரா சுந்தரர் உள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் என்பது தேவையற்ற ஒன்று. மேலும், அரசின் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும்.
மேலும், மூத்த அர்ச்சகர்களின் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு, கோயில் நிதியிலிருந்து 8 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் என்றும் தெரிவித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (நவ. 29) நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, "இதே கோரிக்கையுடன் கூடிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் இடைகால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே பயிற்சி அர்ச்சகர் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை உள்ளதால், அந்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். ஆகையால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது" - பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்!