மதுரை மாவட்டம் சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை அருகே கோலமாவு உற்பத்தி செய்யும் தொழிலில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. மார்கழி மாதம் சமயத்தில் இப்பகுதிகளில் வண்ண வண்ண கோலமாவு உற்பத்தி மிக விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு மிகக் குறைவான அளவிலேயே விற்பனை காணப்படுவதாக கோலமாவு தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராஜேஷ் என்பவர் கூறுகையில், "கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும்தான் எங்களுக்கு இந்தத் தொழில் விறுவிறுப்பாக நடைபெறும். ஏனென்றால், நகர்ப்புறங்களில் வீட்டுவாசலில் கோலம் இடுவது என்பது மிக மிக அரிதாகிவிட்டது.
எங்கள் தொழில் கடந்த பல ஆண்டுகளாகத் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் கரோனா பெருந்தொற்று மற்றொரு வகையில் எங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மார்கழி மாத பிறப்பையொட்டி வழக்கமாக வண்ண வண்ண கோலமாவு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு அவ்வாறு இல்லை. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.