மதுரை வந்திருந்த பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "கடந்த 2001ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அது என்னுடைய திட்டத்தின் பெயரால் எடுக்கப்பட்ட முடிவு.
இரண்டு முறை இந்த விமானநிலைத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் நான் ஈடுபட்டேன். சரத் யாதவ், விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நான் முதல் முறையாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
அப்போது அவர் அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை முன்வைத்தபோது, தமிழக அரசிடமிருந்து ஒப்புதல்பெற வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அச்சமயம் இங்கு முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதேபோல், இரண்டாவது முறையாக 2005-ம் ஆண்டு இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரஃபுல் படேல் வந்திருந்தபோது, இதுதொடர்பாக மேடையில் அவர் பேச முயன்றார்.
ஆனால் அப்போது அவருடன் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரை தடுத்துவிட்டார். இப்படி இரண்டு முறை இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று கூறினார்.