ETV Bharat / state

கற்றலை ஊக்குவிக்கும் காலை உணவு.. களத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன? - Breakfast Program Live Field Study

தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் ஒரு மாதத்தை கடந்துள்ளது, முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி ஆதாரத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் எவ்வாறு பலனளித்துள்ளது என்பதை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 21, 2022, 10:35 PM IST

Updated : Oct 21, 2022, 10:56 PM IST

மதுரை: மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்க்கிறார். மாநகராட்சிப் பள்ளியில் காலை 8 மணிக்கு சுறுசுறுப்பாக குழந்தைகளுக்கு காலை உணவை பரிமாறிக் கொண்டிருந்தார் மஞ்சுளா. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டத்தின் தன்னார்வ பணியாளராக அவதாரமெடுத்திருக்கிறார் மஞ்சுளா. இவரது குழந்தையும் இதே பள்ளியில் தான் இருப்பதால் மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கூலித் தொழிலாளியான தானும் செக்யூரிட்டி வேலைபார்க்கும் தனது கணவரும் அதிகாலையில் வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் என கூறும் மஞ்சுளா, குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டுமே என்ற பதற்றத்தை காலை உணவுத் திட்டம் குறைத்துள்ளதாக கூறுகிறார். குடும்ப சுமையை தாங்குவதில் கூடுதலாக ஒரு கரம் இணைந்துள்ளதால், இத்திட்டத்திற்காக மாதத்தில் சில நாட்கள் தன்னார்வலராக பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறார் இவர்.

வாகனத்தில் வந்திறங்கிய உணவை புகைப்படம் எடுப்பது, உணவு வந்து சேர்ந்த நேரத்தை இதற்கான பிரத்யேக ஸ்மார்ட் போன் செயலியில் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய உணவில் சேமியா கிச்சடியுடன், புரதம் மிக்க பட்டாணி, பருப்பு உள்ளிட்டவையும் மெனுவில் இருந்தன.

தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி", "பள்ளி மேலாண்மை குழு " உள்ளிட்ட திட்டங்களின் பொறுப்பாளர்கள் காலை உணவுத் திட்டத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலரான கிருஷ்ணகுமாரி, உணவு பரிமாறும் போதும், உணவு வேளை முடிந்த பின்னரும் செயலிமூலம் புகைப்படம் எடுத்து அப்டேட் செய்வதாக கூறுகிறார்.

நெல்பேட்டையைச் சேர்ந்த ஆரிஃபா கூறுகையில், வழக்கமாக வீட்டில் காலை உணவு சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தை கூட நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாலும், தினசரி ஒவ்வொரு வகையான உணவு கிடைப்பதாலும் ஆர்வத்துடன் குழந்தைகள் சாப்பிடுவதாக கூறுகிறார்.

வழக்கமாக காலையில் பள்ளிக்கு குழந்தைகள் தாமதமாக வருவது தற்போது முற்றிலும் குறைந்துள்ளதாக கூறுகிறார் மானகிரி மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியரான தேன்மொழி. காலை 7.30 மணிக்கே பள்ளிகளை வந்தடையும் குழந்தைகள் வழிபாட்டு கூட்டங்களிலும் தவறாது பங்கேற்கின்றனர்.

மதுரையைப் பொறுத்தவரையிலும் பொதுவான உணவுக்கூடங்களில் தயாராகும் உணவு வகைகள் அங்கிருந்து மாநகராட்சிக்குட்பட்ட 26 பள்ளிகளுக்கு பிரித்த அனுப்பப்படுகின்றன. இதே போன்று தமிழகம் முழுவதும் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நேரடி பயனாளர்களான குழந்தைகளிடம் பேசிய போது எங்கள் அம்மா இத்தனை வகையாக சமைத்து தருவதே இல்லை என மழலை மாறாமல் புகார் அளிக்கிறார் 5ம் வகுப்பு படிக்கும் கீர்த்தி.

பள்ளிகளில் உணவுத்திட்டம் என்பது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. நூறு ஆண்டு பாரம்பரியம் இந்த திட்டத்திற்கும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 1921ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது, சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் அரசு போதிய நிதி வழங்காததால் நிறுத்தப்பட்ட இத்திட்டத்தை, 1955ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அமல்படுத்தியதன் மூலம் உணவுத்திட்டத்தின் முன்னோடியாக இன்றும் அறியப்படுகிறார் காமராஜர்.

காமராஜருக்கு பின் வந்த முதலமைச்சர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பங்கிற்கு உணவுத்திட்டத்திற்கு சிறப்பு சேர்த்தனர். 1982ம் ஆண்டு மதிய உணவை, சத்தான பொருட்கள் மூலம் சத்துணவாக்கினார் எம்.ஜி.ராமச்சந்திரன். 1989 ம் ஆண்டு முதன் முறையாக பள்ளிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் கருணாநிதி. பின்னர் வாரத்தில் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என முட்டைகளின் எண்ணிக்கை அதிகமானது.

சத்துணவு திட்டத்தில் ஜெயலலிதாவும் சளைத்தவர் இல்லை என்பதைப் போல மசாலா முட்டை, பயறு, பருப்பு என பலவகையான சத்துணவு பொருட்களை குழந்தைகளுக்கான உணவில் சேர்த்தார். இந்த முதலமைச்சர்களின் வரிசையில் மு.க.ஸ்டாலினும் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்..

தமிழக அரசின் சத்துணவுத் திட்டங்கள் சமூகத்தில் நேரடியான விளைவை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் இலக்கான பள்ளிப்படிப்பை முடித்தோரின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளில் 50 விழுக்காடாக உயர்த்துவது என்ற இலக்கை ஏற்கெனவே நிறைவு செய்துள்ளது தமிழ்நாடு.

கற்றலை ஊக்குவிக்கும் காலை உணவு.. களத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன?

குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணம் புரதச்சத்து குறைபாடு என எச்சரிக்கிறது யுனிசெப் அமைப்பு. இந்தியாவில் 33 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடான சவலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் கூறுகிறது மத்திய அரசின் புள்ளிவிவரம். காலை உணவுத் திட்டம் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்த்து திறனுள்ள எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்பது அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்...!

Last Updated : Oct 21, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.