மதுரை: கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இன்று (செப்.1) முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் பெரும் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கருப்பாயூரணியில் அமைந்துள்ள அப்பர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் பெருந்திரளாக பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளை வரவேற்று உபசரித்தனர்.
பள்ளி திறப்பதற்கான ஆயத்த வேலை
பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்கு ராஜன் பேசுகையில், "ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாகவே பள்ளி திறப்பதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றன.
கருப்பாயூரணி சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பகுதியில் இருந்து இப்பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருகை தருகின்றனர். ஆகையால் அவர்களை மிதிவண்டியில் தனித்தனியே வருமாறு அறிவுறுத்தியுள்ளோம். இலவச பேருந்து பயணத்தை மாணவர்களுக்கு அரசு அறிவித்திருந்தாலும் மிதிவண்டியில் வருவதன் மூலம் தொற்று பாதிப்பு குறையும்.
கரோனா குறித்த விழிப்புணர்வு
அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி பள்ளி இயங்கும். போதுமான வகையில் மாணவர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
பள்ளி மாணவர்கள் கூறுகையில், "15 மாதங்களுக்குப் பிறகு எங்களது நண்பர்களை பார்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆன்லைன் கல்வியில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. நேரடியாக பள்ளிக்கு வந்து கற்றுக் கொள்வதைப் போன்று இருக்காது. அந்த அடிப்படையில் இன்று பள்ளி திறந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் பொன்முடி