கரோனா பாதிப்பு காரணமாக மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில் மதுரையின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழாவும் பக்தர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டும் கரோனா பாதிப்பு காரணமாக சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றிலிறங்கும் நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.
அதேபோல் இந்த ஆண்டும் முக்கிய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் மதுரை சித்திரைத் திருவிழாவை நடத்த வலியுறுத்தி மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்திரை திருவிழா மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து விழாக்களையும் நடத்த அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் மட்டுமல்லாமல் திருவிழாக்களை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள், சிறு வியாபாரிகள், கைவினை கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிழா நடத்த வலியுறுத்தி சங்கு ஊதி முழக்கமிட்டும் கோரிக்கையை வலியுறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் போராட்டத்தை கைவிடக் கோரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தமுக்கம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை கைது செய்து காவலர்கள் வாகனத்தில் ஏற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!