மதுரை: பரவை பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "சமீப காலமாக, அதிகப்படியான எண்ணிக்கையில் தெரு நாய்கள் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள், இளம் பெண்கள், முதியவர்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தினந்தோறும் நாய்க்கடிகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதாக செய்திகளில் காண முடிகிறது.
வீடுகளில் செல்லப்பிராணியாக நாயை வளர்ப்பதாகக் கூறி வளர்ப்பவர்கள், சில மாதங்கள் வளர்த்துவிட்டு, பின்னர் தெருக்களில் விட்டு விடுகின்றனர். இதனால் தினந்தோறும் தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகராட்சி, பேரூராட்சிகளில் நாய்களைப் பிடிக்க தனி வாகனங்கள் வைத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, தினந்தோறும் நாய்க்கடிகளால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில், நாய்க்கடிகளால் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட பொழுது, மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,245 நபர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வழங்கியுள்ளனர்.
தெரு நாய்களை முறையாக அப்புறப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என தெருநாய்களை முறைப்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர், தெரு நாய் பிரச்னை என்பது இங்கு மட்டுமல்ல பொதுவாகவே பல இடங்களில் தெருநாய்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதே பிரச்னை உள்ளது, எனக் கூறிய நீதிபதிகள் மனு குறித்து அரசு தரப்பில் உரிய பதிலளிக்க உத்தரவிட்டனர்.
முக்கியமான பொது பிரச்னைகளில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யும் போது, மனுதாரர்கள் கோரும் நிவாரணம் குறித்த, உரிய பொறுப்பான அதிகாரிகள், உயர் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்றும்; அவ்வாறு உரிய எதிர்மனுதாரர்களை பொது நல வழக்கில் சேர்க்கவில்லை என்றால், பொது நல மனு மீது உரிய நிவாரணம் விரைவாக பெற முடியாது என்றார்கள்.
மேலும், உரிய எதிர்மனுதாரர்களை சேர்க்காத பொது நல மனுக்கள் மீதான விசாரணையில், உரிய உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி, இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தை எதிர்மனுதாரராக இணைக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: மேல்படிப்புக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... அமெரிக்காவில் சிக்கிய மகளை மீட்க தாய் கோரிக்கை!