மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள ஒரு லட்சத்து ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு 5 கிலோ காய் கறிகளை தனது சொந்த செலவில் இலவசமாக திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினரும் வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். தொடர்ந்து திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளாக தினம்தோறும் 10,000 நபர்களுக்கு இந்த காய்கறி தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''முதலமைச்சர் ஏற்கனவே 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை வழங்கினார். இதனைதொடர்ந்து இந்த மாதத்திற்கும் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை ஆகியவற்றை விலையில்லாமல் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லி வருகிறார். பேரிடர் காலங்களில் முதலமைச்சரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு வருகிறார். கரோனா வைரஸ் சோதனை செய்யும் ராபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபட கூறிவிட்ட பின்பும், ஸ்டாலின் குற்றம்சாட்டுவது அரசியலுக்காக தான்.
தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த ராபிட் டெஸ்ட் கிட் மூலம் நேற்று மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவர்க்கு கூட வைரஸ் தொற்று இல்லை என்பது மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்தது'' என்றார்.
இதையும் படிங்க: ‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்