மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில்,
'எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன் என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்துப் பெற வந்திருக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள் வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன். கலைஞரைத் தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா, மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது.
ஆயர் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன். அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன். கலைஞரைப் போல நானும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும். மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது. அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது.
சமத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் காரியங்கள் தற்போது இந்திய நாட்டில் அரங்கேறியுள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமூகக் குற்றமாக இப்போது பார்க்கப்படுகிறது. அனவரும் சகோதரர்களாக இருங்கள் என்றாலே வித்தியாசமாகப் பார்க்கின்றனர். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தேசத் துரோகம் என்பது போல உள்ளது. மதம் பார்த்து இரக்கப்படு என்று சொல்வது தான் தேசபக்தி என்கின்றனர். இந்தியா இதுவரை கட்டிக்காத்த அனைத்து நெறிகளையும் பாஜக காலில் போட்டு மிதித்துவிட்டு மோசமான இந்தியாவாக மாற்றியுள்ளனர்.
அதனால் தான், தற்போது நாடு பற்றி எரிகிறது. பாஜகவிற்கு எதிரான போராட்டம் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டம். மக்களைப் பற்றி பேசுவது தான் தேசபக்தி. பேசாதே என்பது தேசபக்தி இல்லை. பொருளாதாரம், வேலைவாய்ப்பை உயர்த்துங்கள் என்றால் அதைப் பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவரையிலும் உருப்படியான ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் மீறல்களை ஏன் என்று கேட்கக் கூடிய ஆட்சி இங்கு இல்லை. சிறுபான்மையினரை புறக்கணிக்கக் கூடிய சட்டம் என்பதால் எதிர்க்கிறோம். மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம் இது. சட்ட மசோதாவிற்கு ஆதரவு என்பது கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறுகிறார்.
கூட்டணி தர்மம் என்றால் காலில் விழுங்கள். ஆனால் மசோதாவை ஆதரித்தது துரோகம். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் சமூக விரோதிகள் என்கிறார்கள். சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரானது தான் தற்போது நடக்கும் போராட்டம். குடியுரிமைச் சட்டம் என்பது அகதிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய உன்னதமான சட்டம். ஆனால், பாஜக அரசின் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் எதிர்க்கிறோம். அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று கூறியிருந்தால் நான் பாராட்டியிருப்பேன். சட்டத் திருத்த மசோதா இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.
இனத்தால் தமிழர்களைப் பிரிப்பதை ஏற்க இயலாது. மத்திய அரசின் மசோதா இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான மாபெரும் துரோகம். மாநிலங்களவையில் அதிமுகவும் பாமகவும் எதிர்த்திருந்தால் மசோதா நிறைவேறியிருக்காது. குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம். இதனை, தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்' எனக் காட்டமாக பேசினார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின்